ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சஞ்சு சாம்சன் – ரவீந்திர ஜடேஜா இடையேயான மெகா ஒப்பந்தம், தற்போது திடீர் சிக்கலை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து விட்டு, அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வுக்குக் கொண்டு வரும் இந்த ஒப்பந்தம், தொழில்நுட்ப காரணங்களால் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add Zee News as a Preferred Source

ஒப்பந்தத்தில் என்ன சிக்கல்?
ஐபிஎல் விதிகளின்படி, ஒரு அணியில் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். எனவே, இங்கிலாந்து வீரரான சாம் கரணை அவர்கள் தங்கள் அணியில் இணைப்பதற்கு முன்பு, தற்போதுள்ள வெளிநாட்டு வீரர்களில் ஒருவரை விடுவிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிவடையாததால், சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு கொடுக்கும் ஒப்பந்தமும் தற்காலிகமாக தடைபட்டுள்ளது. இந்த சிக்கல் சரிசெய்யப்படும் வரை, ஜடேஜா சிஎஸ்கே அணியிலேயே நீடிப்பார்.
நவம்பர் 15 கெடு
ஐபிஎல் அணிகள், தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் இறுதி பட்டியலை வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பிசிசிஐ கெடு விதித்துள்ளது. இருப்பினும், வீரர்கள் பரிமாற்றத்திற்கான காலக்கெடு வேறுபட்டது. ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பு வரை வீரர்கள் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதால், இந்த ஒப்பந்தம் தாமதமாக வாய்ப்புள்ளது.
டிசம்பரில் மினி ஏலம்
இதற்கிடையில், ஐபிஎல் 2026-க்கான மினி ஏலம், வரும் டிசம்பர் 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் அபுதாபியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாய் மற்றும் ஜெட்டாவை தொடர்ந்து, மூன்றாவது முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில், விடுவிக்கப்பட்ட வீரர்களை மீண்டும் வாங்கவும், புதிய வீரர்களை எடுக்கவும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல். ராகுலுக்கு கொல்கத்தா வலை
சஞ்சு சாம்சனை போலவே, மற்றொரு முக்கிய வீரரான கே.எல். ராகுலையும் டிரேடிங் மூலம் தங்கள் அணிக்குக் கொண்டு வர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
About the Author
RK Spark