புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது. புகை வான்வரை பரவியது.
சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. கார் வெடித்ததும், அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. கார் பாகங்களும், மனித உடல்களும் பரவி கிடந்தன.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பூடானில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திப்பதற்காக, லோக் நாயக் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றார். அவர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனை அவருடைய எக்ஸ் வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். சதி திட்டத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் நேராக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து உள்ளார். அதன்பின்னர், அவர்களுடன் உரையாடியதுடன், விரைவில் குணமடைந்து வரும்படி வாழ்த்தினார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் வருவது தெரிந்ததும் ஊடக துறையினர் குவிந்து விடாமல் இருப்பதற்காக, தனியாக மருத்துவமனையின் பின்வாசல் வழியே உள்ளே சென்றுள்ளார். அவர், மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விரிவான விவரங்களையும் கேட்டறிந்து உள்ளார்.