பீஜிங்,
இரவு வானத்தை பிரகாசமாக்கும் பூமியின் துணைக் கோளான நிலவு, வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த வானியல் ஆய்வாளர்களால் இடைவிடாது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொலைநோக்கியில் தொடங்கிய இந்த ஆய்வு பயணம், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மனிதர்கள் நேரடியாக நிலவிற்கு சென்று கால் பதிக்கும் அளவிற்கு முன்னேறியது.
இருப்பினும் நிலவின் மீதான மனித இனத்தின் பேரார்வம் இன்று வரை தணியவில்லை. நிலவில் கால் பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங், “ஒரு மனிதனுக்கு இது மிகச்சிறிய காலடி, மனித இனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்” என்றார். அவர் கூறியபடி, விண்வெளி ஆய்வில் மனித இனம் இன்று அளப்பரிய வளர்ச்சிகளை கண்டு வருகிறது.
1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய ‘அப்போலோ-11’ விண்கலம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனை படைத்தனர். இதன் மூலம், ‘நிலவில் முதலில் கால்பதிப்பது யார்?’ என அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நடந்து வந்த விண்வெளி பந்தயத்தில், அமெரிக்கா வரலாற்று வெற்றியை பெற்றது.
நிலவில் மனிதர்கள் தரையிறங்கி அரை நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், சீனா தற்போது நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக சீனா நீண்ட காலமாக தயாராகி வருகிறது. சீன விண்வெளி வீரர் வாங் லிவெய், கடந்த 2003-ம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு சென்றார்.
அதன் பிறகு பல்வேறு விண்வெளி பயண திட்டங்களை சீனா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, சீனா தனது சொந்த விண்வெளி நிலையமான ‘தியாங்காங்’ விண்வெளி நிலையத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, வரும் 2030-ம் ஆண்டு ஓய்வு கொடுக்கப்படும். அதன் பிறகு உலகில் விண்வெளி நிலையத்தை கொண்டிருக்கும் ஒரே நாடாக சீனா தனித்து அதிகாரம் செலுத்தும்.
இந்த சூழலில், ‘மெங்சூ’ விண்வெளி பயண திட்டம் மூலம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. மொத்தம் 6 பேர் பயணம் செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தை சீனா விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் நாசா தரப்பில், வரும் 2027-ம் ஆண்டு நிலவிற்கு மனிதர்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1972-ம் ஆண்டு ‘அப்போலோ-17’ விண்கலம் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய பிறகு, ..அமெரிக்கா நிலவு பயண திட்டங்களை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், ‘ஆர்டெமிஸ்-3’ திட்டம் மூலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா மீண்டும் நிலவில் கால்பதிக்க உள்ளது.
ஆனால், அமெரிக்காவின் விண்வெளி பயண திட்டங்களில் எதிர்பாராத பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி 2027-ம் ஆண்டு நிலவு பயணதிட்டத்தை அமெரிக்காவால் சாத்தியப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் சீனாவிற்கு முன்பாக எப்படியாவது தங்கள் நிலவு பயண திட்டத்தை செயல்படுத்திவிட வேண்டும் என ..அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இது தொடர்பாக நாசாவின் முன்னாள் இணை நிர்வாகி மைக் கோல்ட் கூறுகையில், “நிலவிற்கு யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள்தான் நிலவில் நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி பந்தயத்தில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.