2014-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் பாரதி தீட்சித் – ஆஷிஷ் மோடி இருவரும் காதலித்து அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநில அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித்தும், இவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதி தீட்சித் மாநில காவல்துறைத் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில், “ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ் மோடி, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து என்னை திருமணம் செய்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினார். அக்டோபர் 15 ஆம் தேதி எனது கணவரும் அவரின் சில கூட்டாளிகளும் என்னை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காரில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தனர்.
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள துப்பாக்கி முனையில் மிரட்டினார். என் அறையில் மறைமுகமாக ஒரு கேமராவை நிறுவியும், என் செல்போனை வேவு பார்க்கும் சாதனங்களுடன் இணைத்தும் கொடுமைபடுத்தினார்.
எனவே, என் கணவர் மீதும் அவரின் கூட்டாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஆஷிஷ் மோடி, “என் மீதான குற்றச்சாட்டுக்கான விசாரணையில் நான் முழுமையாக ஒத்துழைப்பேன்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நவம்பர் 4, 2025 முதல் 7 வரை நான் பீகாரில் இருந்தேன். இந்த விவகாரம் தற்போது காவல்துறை விசாரணையில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.