ஹைதராபாத்: ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியின் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ மாகண்டி கோபிநாத் மரணம் அடைந்ததால் இந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
4.01 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் மொத்தம் 58 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் பிஆர்எஸ் வேட்பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ மாகண்டி கோபிநாத்தின் மனைவி), காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடையில்தான் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பொதுவாக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் திரைப்படத் துறையினர், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் அதிகமாக வசிப்பதால் இதனை விஐபி தொகுதி என்றும் அழைக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் ராஜமவுளி, நடிகர் கோபிசந்த் உள்ளிட்ட பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர். இத் தொகுதியில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 49 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்னும் பலர் வரிசையில் இருந்ததால் வாக்குப் பதிவு அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு நேற்று மாலை வெளியானது. இதில் பிஆர்எஸ் வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 2 முதல் 5 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார் என கூறப்பட்டுள்ளது.