துல்கர் சல்மான், ரானா, சமுத்திரகனி ஆகியோர் நடித்திருக்கும் ‘காந்தா’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் பீரியட் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இத்திரைப்படத்திற்காக துல்கர் சல்மானை சினிமா விகடன் யூட்யூப் தளத்திற்காக பேட்டி கண்டோம்.

துல்கர் சல்மான் பேசும்போது, “‘மகாநடி’ திரைப்படம் என்னுடைய முதல் பீரியட் திரைப்படம். டிஸ்னி உலகத்துக்குள்ள போகிற மாதிரியான உணர்வு எனக்கு இருந்தது.
இப்படியான பீரியட் படங்கள் பண்றது டைம் டிராவல் செய்யுறது மாதிரிதான். பல மொழிகள்ல நான் கதைக் கேட்பேன். நடிக்கிறதுக்காகவும், தயாரிப்பிற்காகவும் நான் கதைகள் கேட்பேன்.
ஆனா, இது மாதிரியான கதையை நான் இதுவரைக்கும் கேட்டதில்ல. என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை இந்தப் படத்துல பார்க்கிறதுல அப்படியொரு த்ரில்!
நிறைய நல்ல படங்களுக்கு தயாரிப்பு பக்கம் இருந்து முழுமையான சப்போர்ட் கிடைக்காது. அதனால, அது போன்ற நல்லப் படங்களை நான் பாதுகாக்க விரும்புவேன்.
என்னுடைய அப்பா அம்மா எனக்கு செய்த விஷயங்களாலதான் என்னால இப்படியான ரிஸ்க் விஷயங்களை கையிலெடுக்க முடியுது. எப்போதுமே நல்ல படங்கள் செய்யுறதுக்கு எனக்கு தைரியம் இருக்கு.

அப்பா என்கிட்ட ‘உனக்கு அக்காவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். வீடு கட்டணும்னு எந்த கஷ்டமும் கிடையாது.
எனக்கு அப்படியான கமிட்மெண்ட் இருந்தது. அதனாலதான் சில மோசமான படங்கள்ல நான் நடிச்சேன். உனக்கு அதெல்லாம் கிடையாது. அதனால, நல்லப் படங்களைதான் நீ தேர்வு பண்ணனும்’னு கிண்டலாக சொல்லுவாரு.
நல்ல படங்களை தேர்வு பண்ணீட்டே இருந்தால், நல்ல திரைப்படங்கள் நமக்கு வந்துகிட்டே இருக்கும்.” என்றார்.