கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘நாயகன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களுக்கு செட் அமைத்த தோட்டா தரணிக்கு இந்தாண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் இதற்கு முன் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களைத் தாண்டி சத்யஜித் ரே, அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற ஜாம்பவான்கள் சிலரும் இந்த விருதை வென்றிருக்கிறார்கள்.
வருகிற நவம்பர் 13-ம் தேதி சென்னையிலுள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட உள்ளது.
அங்கு ‘லா மேசான்’ என்ற கஃபே நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார்.
இதே நிகழ்வில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கவிருக்கிறார்கள்.
தற்போது இதே இடத்தில் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 14-ம் தேதி வரை தொடர்ந்து அங்கு ஓவியக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.
‘நாயகன்’, ‘இந்தியன்’ திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளையும் வென்றிருக்கும் தோட்டா தரணி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலிய திரைப்படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.