IPL : ஐபிஎல் 2026 சீசன் நெருங்க நெருங்க, ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கிவிட்டது. அணியின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில், வீரர்கள் தக்கவைப்பு (Retention) மற்றும் நேரடி வர்த்தகத்தில் (Trade) பல அதிரடி முடிவுகளை ஐபிஎல் அணிகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக, தல தோனியின் பயிற்சி பற்றிய தகவல் தொடங்கி, டெல்லி கேபிடல்ஸின் அதிரடி முடிவுகள், கேகேஆர்-இன் புதிய பயிற்சிக்குழு வரை பல சுவாரஸ்ய தகவல்களைக் காணலாம்.
Add Zee News as a Preferred Source
CSK அப்டேட்: ஐபிஎல் 2026-க்கு தயாராகும் தல தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட் செய்தி. அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், ஜாம்பவான் கேப்டனுமான எம்.எஸ்.தோனி (MS Dhoni) அடுத்த ஐபிஎல் சீசனுக்காக இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டார். தினமும் அசுரத்தனமான பயிற்சி செய்து வருகிறார் அவர். தினசரி சுமார் 4.5 முதல் 5 மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி, களத்தில் குறைந்த பந்துகளில் அதிக ரன்களைக் குவிக்க, பவர் ஹிட்டிங் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், உடற்தகுதியை பேண, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதுடன், நீச்சல் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். போட்டி நடக்கும் கள சூழலை போலவே பயிற்சி மேற்கொண்டு, ஆட்டத்தின் முடிவில் ஃபினிஷிங் கொடுக்கும் தனது திறனை மெருகேற்றி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ்: வெளியேறும் வீரர்கள் யார்?
டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) நிர்வாகம், வரும் ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக சில முக்கியமான வீரர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அணியின் நட்சத்திர வீரர்களான ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் (Faf Du Plessis) மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் (Jake Fraser-McGurk) ஆகியோர் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹாரி புரூக் சம்பள தொகை குறித்தும் நிர்வாகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் குறித்து டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. அவர் அணியின் டெத் ஓவர் பந்துவீச்சாளராக இருப்பதால், அவரை அணியில் தக்க வைக்கலாமா? அல்லது வெளியிடலாமா? என ஆலோசனை நடத்துகிறது.
KKR-இன் புதிய அசிஸ்டன்ட் கோச் ஷேன் வாட்சன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நிர்வாகம் தங்களது பயிற்சிக்குழுவில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், ஐபிஎல் சாம்பியனுமான ஷேன் வாட்சன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக (Assistant Coach) நியமிக்கப்பட்டுள்ளார். வாட்சன், KKR அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் ஆலோசகர் டுவைன் பிராவோ ஆகியோருடன் இணைந்து செயல்படுவார். இது KKR அணியின் வியூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேச்சுவார்த்தை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் தக்கவைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது கோல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பந்த் அடுத்த சீசனுக்கும் அணியின் தலைமைப் பொறுப்பில் நீடிப்பதை உறுதி செய்யும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். பந்த், டாம் மூடி, ஜஸ்டின் லேங்கர், பாரத் அருண் போன்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஐபிஎல் 2026-க்கான தக்கவைப்பு (Retention) இறுதிப்பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 15-ம் தேதி என்பதால், இந்த வாரம் ஐபிஎல் ரசிகர்களுக்கு மிக சுவாரஸ்யமான வாரமாக இருக்கும்
About the Author

Karthikeyan Sekar
I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.
…Read More