ஜம்மு: ‘ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதி அல்ல. ஒரு சிலர் மட்டுமே அமைதியைக் கெடுக்கிறார்கள்’ என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்த முதல்வர் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த மதமும் இவ்வளவு கொடூரமாக அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடரும். ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதியோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களோ அல்ல. இங்கு எப்போதும் அமைதியையும், சகோதரத்துவத்தையும் சீரழித்து வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஒவ்வொரு குடிமக்களையும், ஒவ்வொரு காஷ்மீரி முஸ்லிமையும் ஒரே சித்தாந்தத்துடன் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவரும் பயங்கரவாதி என்று நாம் நினைப்பது கடினமானது. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “படித்தவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதில்லை என்று யார் கூறுகிறார்கள்? அவர்களும் ஈடுபடுகிறார்கள். தற்போது குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களின் வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும், அதன் பிறகு என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? ஏன் இதுபற்றி வழக்குத் தொடரப்படவில்லை? நிலைமையை இயல்பாக வைத்திருக்க மத்திய அரசுக்கு மட்டுமே நாங்கள் உதவ முடியும், நாங்கள் அதைச் செய்கிறோம்” என்று அவர் கூறினார்.