தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளங்கள் மாற்றி அமைக்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, மத்திய அரசு அறிவித்து பல மாதங்கள் கழித்து அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு முன்தேதியிட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்த படி, கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அறிவித்ததும் ஒரு சில நாட்களிலேயே மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவித்து, வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. ஆனால், தமிழக அரசு அறிவிக்காமல் இருந்தது. ஏற்கெனவே, பழைய ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாதது குறித்து கோரிக்கை எழுப்பி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தலைமைச் செயலக சங்கமும் இதுதொடர்பாக கோரிக்கைமுழக்க கூட்டத்தில் பேசியதுடன், முதல்வருக்கு கோரிக்கையும் வைத்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலனில் அன்பும், அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களை தீட்டுவதிலும், அந்த திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணி ஆற்றுவதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

அவர்களது நலனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2025 ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக மாநிலப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜூலை1-ம் தேதி முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.