கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பேட்டை வடக்குத் தெருவில் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி ஒருவர் அழித்துள்ளார்.
பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன் (50). விவசாயியான இவர் 15 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், இவர் கடந்த ஜூன் மாதம் இறுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக நடவு பணியை மேற்கொண்டார். தொடர்ந்து கதிர் விடும் பருவத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த பலத்த மழையினால், 15 ஏக்கரில் மழை நீர் சூழ்ந்தது.
பின்னர் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் வயலில் தேங்கிய நீர் வடியாமல் சுமார் 3 அடிக்கு மேல் தேங்கி நின்றது. இதனால் பள்ளமான பகுதியில் நடப்பட்ட நெற்பயிர்கள் அழுகின. கதீர் முளைக்கும் பருவத்தில் இருந்த நெற்பயிர்களில் கதிர்கள் முற்றின. இதையடுத்து, கடந்த நவம்பர் இறுதியில், அறுவடை இயந்திர உரிமையாளர்கள், வயலில் 3 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நிற்பதால், அறுவடை பணி மேற்கொள்ள முடியாது என கைவிரித்து சென்றனர்.
இந்த நிலையில், தற்போது 15 ஏக்கரில் 10 ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற, ராட்ஷத டிராக்டர் மூலம் 5 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட வயலில் மழை நீர் வடியவைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் 5 ஏக்கர் அழித்து மழை நீர் வடியவைப்பதால் செலவு செய்த தொகை அனைத்தும் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விவசாயி தமிழ்ராஜன் கூறியது: “சாகுபடி செய்திருந்த குறுவை நெற்பயிரை மழை நீர் சூழ்ந்து 3 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த வயலில் இயந்திரங்களை இயக்கினால் சிக்கிக்கொள்ளும், இயந்திரமும் பழுதாகும், மழை நீரை வடியவைத்தால் தான் அறுவடை செய்ய முடியும் என கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
இதனால் கடந்த பல நாட்களாக தேங்கி உள்ள நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துவதால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், நெல்மணிகளில் நாற்றுகள் முளைத்து பதறாகி வருகிறது. இதனால் 1 ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் என 15 ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கி, நகைகளை அடமானம் வைத்து சாகுபடி மேற்கொண்ட நெற்பயிர்கள் வீணாகி விடும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இருக்கும் சொற்ப நெற்பயிரை காப்பாற்ற மாற்று வழியில்லாததால் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் வயலில் தேங்கி உள்ள மழை நீரை, அருகில் உள்ள 5 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட வயலை அழித்து, அந்த வயலில் மழை நீரை வடியவைக்க முடிவு செய்யப்பட்டன. அதன்படி கடந்த 2 நாட்களாக ராட்ஷத டிராக்டர் இயந்திரம் 10 ஏக்கரில் தேங்கி மழை நீரை வடியவைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 ஏக்கருக்கு 40 மூட்டைக்கு பதில் தற்போது 1 ஏக்கருக்கு 15 மூட்டை கிடைப்பதே அரிதாகும்.

இது தொடர்பாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டு கணக்கெடுத்து சென்றனர். அதன்பின் வரவில்லை. இதற்கான தீர்வு தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் தலைப்பு முதல் கடைமடை வரை தூர்வாரினால்தான், அந்தப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் வயலில் மழை நீர் தேங்காது.
எனவே, மாவட்ட நிர்வாகம், வரும் மழை காலத்திற்குள் தேப்பெருமாநல்லூர் வாய்க்காலை தூர்வாராவிட்டால், அந்தப் பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், விவசாயப்பணியை கைவிட முடிவு செய்துள்ளோம், அந்தப் பகுதியில் பல்வேறு வேளாண்மை விவசாயப்பணி பாதிக்கப்பட்டுள்ளதால் பல விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.