காசா சிட்டி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்த போரால் காசா முழுவதுமாக உருக்குலைந்து போனது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்காக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த அக்டோபர் 10-ந்தேதி இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, காசா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐ.நா. சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப்(UNICEF) சார்பில் காசாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக நீடித்து வந்த போர் சூழல் காரணமாக தடுப்பூசியை தவறவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி தட்டம்மை, நிமோனியாவிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் போலியோ சொட்டு மருந்தும் வழங்கப்படுகிறது. இந்த முகாம், கடந்த நவம்பர் 9-ந்தேதி தொடங்கிய நிலையில், வரும்18-ந்தேதி வரை நடைபெறுகிறது.