கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) ‘தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஏன் கிணறு வெட்டக் கூடாது?’ என்கிற யோசனை தோன்றுகிறது.
ஆனால் ஏற்கனவே தன் மகளை தண்ணீரில் பலி கொடுத்த பாட்டி, பேரனின் ஆசைக்குத் தடையாக இருக்கிறாள். இதற்கு நடுவே அவனது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார்.

சிறுவர்கள் இதற்கு மத்தியில் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஆசையில் வென்றார்களா என்பதே குழந்தைகள் தினத்தன்று வெளியாகியிருக்கும் ‘கிணறு’ படத்தின் கதை.
கனிஷ்குமார், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன், மனோஜ் கண்ணன் என நான்கு சுட்டிகளுமே அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பாட்டியிடம் சண்டை போடுவதும், குற்ற உணர்வில் அழுவதுமான இடங்களில் கனிஷ்குமார் கவனிக்க வைக்கிறார்.
கிளைக்கதையாக நடமாடும் பஞ்சர் கடையாக டிவிஎஸ் 50யில் வலம் வருகிறார் விவேக் பிரசன்னா. நடிப்பிலும் கொஞ்சம் காற்றை அதிகமாகவே அடைத்து விடுகிறார். அதேபோல பாட்டியிடமும் இயக்குநர் இன்னும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம்.
எழில்மிகு கிராமத்தின் அழகைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் வெங்கடேஷ். ஆனால் உரையாடல்கள் வருகிற இடத்தில் இடம்பெறும் காட்சிக்கோணங்கள், ஒவ்வொருவரும் பேச இடைவெளி விட்டும் டிராமா பாணியிலான ஸ்டேஜிங் தொக்கி நிற்கிறது.

இது படத்தின் யதார்த்த தன்மையைக் குறைக்கிறது. ஃபீல் குட் இசையைக் கொடுக்க முற்பட்டிருக்கிறார் புவனேஷ் செல்வநேசன். ஆனால், சில இடங்களில் இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாமல் வாத்தியங்கள் தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
படத்தொகுப்பாளர் கௌதம் ராஜ் கே.எஸ். சுற்றலில் விடும் இறுதிக்காட்சிகளுக்கு இன்னும் கத்தரி போட்டிருக்கலாம்.
குழந்தைகள் உலகத்தையும் அவர்களுக்குள் இருக்கும் பாசாங்கற்ற தன்மையையும் ஒரு கிணற்றைச் சுற்றி கதையமைத்து காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ஹரிகுமரன். சிறுவர்களை நன்றாக நடிக்க வைத்திருப்பவர், திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறியிருக்கிறார்.
ஓர் எல்லைக்குமேல் படம் சுவாரஸ்யத்தை இழந்துவிடுகிறது. கிளைக்கதையாக வருகிற பஞ்சர் ஒட்டுபவரின் கதையும், மாமாவின் நில ஆசையும் மிகவும் மேலோட்டமாகவே அணுகப்பட்டிருக்கின்றன.

மேலும் இறுதிக்காட்சி எந்த விதத்திலும் தர்க்கரீதியாக எழுதப்படவில்லை. அதேபோல குழந்தைகள் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகக் காட்சிப்படுத்திய விதமும் அவசியமற்றதாகவே தெரிகிறது.
மொத்தத்தில் சிறுவர்களின் கியூட் நடிப்பினால் பாதி கிணற்றை நாம் தாண்டினாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மீதி கிணற்றைத் தாண்டுவது சிரமமாகிப் போகிறது.