பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருதை, கலை இயக்குநர் தோட்டா தரணி பெற்றிருக்கிறார்.
சிவாஜி, கமல்ஹாசன் உள்ளிட்ட சில நடிகர்கள் இதற்கு முன் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.
இப்போது அந்த உயரிய விருதை தோட்டா தரணி பெற்றிருக்கிறார்.

‘நாயகன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான படைப்புகளுக்கு பிரமாண்ட செட் அமைத்தவர் தோட்டா தரணி. விருது பெற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தோட்டா தரணி பேசுகையில், “நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள். அதே போலத்தான் தயாரிப்பாளர்களும். அதனால், இந்தப் படம்தான் எனக்கு விருதை பெற்றுத் தந்தது எனச் சொல்ல முடியாது.
நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள்.
எனக்கு வாய்ப்புகளும் சரியாக அமைந்தது. இதுவரை நடிகர்கள் இருந்த விருதை வாங்கியிருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞரான எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதை எண்ணி மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
இதுவரைக்கும் நான் சவாலான படங்கள் பண்ணலனு தான் சொல்வேன்.

எப்போதும் ஒரு சமயத்திலேயே ஒரு ஓவியத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிடுவேன்.
30 ஆண்டுகளுக்கு முன்பு நானொரு பெரிய பெயின்டிங் செய்தேன். இப்போதிருக்கும் பல வசதிகள் அப்போது கிடையாது. மீக நீளமாக செய்த பெயின்டிங்கை மாலை நேரத்தில் தொடங்கினேன்.
அடுத்த நாள் மதிய வேளையில் அதனை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டேன். அதுதான் நான் வேகமாக முடித்த பெயின்டிங். இந்த மாதிரியான தருணங்கள்ல என்னுடைய தந்தையை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு எப்போதும் பேப்பர் பென்சில்தான் தெரியும். கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.” எனக் கூறினார்.