தஞ்சாவூர்: பிஹாரின் சதி தமிழகத்தில் எடுபடாது. தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. ராமலிங்கம் வரவேற்றார். முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், நகர்புற மற்றும் நீர்வளங்கள் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்து கூறியதாவது: வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியல் பணி நடைபெறுவதால், இந்த நேரம் மிகவும் கடுமையான நேரம்.
மக்களுக்கு பணியாற்றக் கூடிய இடத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் யாரும் ஏமாந்து விடக்கூடாது. வாக்காளர்கள் சீரமைப்பு பணிக்கு நாம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள நிர்வாகிகளுக்கு, சேர்மன், எம்எல்ஏ., எம்.பி.,க்கான வாய்ப்புகள் வரலாம். ஆனால், வாய்ப்புகள் வரும் போது, வாக்கு இருந்தால்தான் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழகத்தில் மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்றால், டெல்டாவில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றால் தான் முடியும்.” என்று அவர் கூறினார்.
மேலும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசும்போது: தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி, மத்திய அரசு கைவிரிப்பு, இதற்கிடையிலும், நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என எண்ணிய தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிஹாரில் முறையாக தேர்தல் நடந்திருந்தால், இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.
வாக்குத் திருட்டு என்ற சதிச் செயல் நடந்திருக்கின்ற காரணத்தால், பிஹாரில் இது போல நடந்தேறியுள்ளது. பிஹாரைப் போல் தமிழகத்திலும் நடக்கக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எனவே, பிஹாரின் சதிச் செயல் தமிழகத்தில் எடுபடாது. தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு மிக்கவர்ள்.” என்று அவர் தெவித்துள்ளார்.