கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்தவர் ஆர்.கே. சிங். பிஹார் அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதியாகத் திகழ்கிறார். அர்ரா தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில் கட்சியிலிருந்து ஆர்.கே.சிங்கை சஸ்பெண்ட் செய்து பாஜக மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்து ஒரு நாள் மட்டுமே ஆனநிலையில் அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிஹார் எம்எல்சி அசோக் அகர்வாலும், கடிஹார் மாநகராட்சி மேயர் உஷா அகர்வாலும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில பொறுப்பாளர் அர்விந்த் சர்மா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைமை மீது முன்னாள் எம்.பி.யான ஆர்.கே.சிங் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தார். இதைத் தொடர்ந்தே அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையைத் தொடர்ந்து ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.