புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் இருந்து பெறப்பட்ட துப்புகளின் அடிப்படையில் நவ்காம் காவல்துறை, சமீபத்தில் மிகப் பெரிய வெடிகுண்டுகள் தொகுதியைக் கைப்பற்றியது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 162/2025 முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் நவ்காம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்களின் தொகுப்பை, வழக்கமான நடைமுறைப்படி காவல்நிலையத்தில் திறந்தவெளியில் சேமித்து வைத்தனர்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கடந்த இரண்டு நாட்களாக எஸ்ஓபி-யை பின்பற்றி மேற்பார்வையிட்டு வந்தனர். மேலும், அவை தடயவியல் மற்றும் வேதியியல் பரிசோதனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை எதிர்பாராத வகையில் வெடிபொருட்கள் வெடித்தன. இதில், 9 பேர் உயிரிழந்துவிட்டனர். 27 காவலர்கள், 2 வருவாய் அதிகாரிகள், 3 பொதுமக்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிவிபத்து காவல் நிலைய கட்டிடத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, அருகில் உள்ள பிற கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சேத மதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையற்ற ஊகங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த துயரமான நேரத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியுடன் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத், “மாநில புலனாய்வு நிறுவன அதிகாரி ஒருவர், மூன்று தடயவியல் ஆய்வக அதிகாரிகள், இரண்டு குற்றப்பிரிவு அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள் மற்றம் இந்த குழுவுடன் தொடர்புடைய ஒரு தையல்காரர் ஆகியோர் உயிரிழந்தனர். 27 காவல்துறை அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள், பொதுமக்களில் மூவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
வெடிகுண்டுகள் அவற்றின் உணர்திறனை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட்டதாகவும் எனினும், வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணி அளவில் தற்செயலாக இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து வேறு எந்த ஊகங்களும் தேவையற்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.