மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை துவங்கி உள்ளது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு படிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களிலும் படிவங்கள் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த வடிவேல் என்பவர் கூறும்போது, “திருப்பூரில் தொழிலாளர்கள் பகல் நேரங்களில் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அதேபோல் பெரும்பாலான தொழிலாளர்கள் வாடகை வீட்டில் வாழ்பவர்கள் என்பதால், அடிக்கடி வீட்டை மாற்றிக்கொண்டு வாழ்பவர்கள். பணிபுரிபவர்களில் பலருக்கும் ஆதார், கியாஸ் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என ஒவ்வொன்றும் வெவ்வேறு முகவரியில் இருப்பதை பார்க்கிறோம்.
ஆனால் அவர்கள் குடும்ப அட்டையில் உள்ள முகவரிக்கு வந்து, நியாயவிலைக் கடையில் பொருட்களை இன்றைக்கும் பல குடும்பங்கள் வாங்கி செல்கின்றன. வேலை செய்யும் பனியன் நிறுவனங்கள் அடிக்கடி மாறுவது, வீட்டின் வாடகை இவற்றை கணக்கில் கொள்வதால், முகவரி மாற்றத்தை பெரியதாக பொருட்படுத்துவதில்லை” என்றார்.
அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “திருப்பூர் மாநகரில் தெற்கு, வடக்கு தொகுதிகளில் பணி சுணக்கமாக இருப்பதால், ஏற்கெனவே பணியில் இருந்த ஆசிரியர்களுடன், கூடுதலாக ஆசிரியர்களை களப்பணிக்கு அனுப்ப வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். பணிச் சுமையால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மொத்தமாக திருப்பூர் போன்ற தொழில் நகரில் வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் என இருதரப்பிலுமே பணிச்சுமையால் தடம்புரளவே வாய்ப்புகள் அதிகம். அதிகாரிகளும் முழுமையாக வீடுகளுக்கு சென்று, விசாரித்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதில்லை.
திருப்பூரில் பெரும்பாலும் கணவர் மட்டுமின்றி மனைவியும் வேலைக்கு செல்வதால், பகல் நேரங்களில் 10-ல் 6 வீடுகள் பூட்டித்தான் இருக்கின்றன. ஏற்கெனவே பல தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு கூடுதலாக ஆசிரியர்களை அனுப்பினால் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கும்” என்றார்.
திருப்பூரை சேர்ந்த அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “வாக்குச்சாவடி அளவில் வாக்காளர் படிவங்களை நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து கொடுப்பதைத் தவிர்த்து, ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு வாக்காளர்களை அந்த இடத்திற்கு வரச் சொல்லி படிவங்களைக் கொடுக்கின்றனர். ஒரு சில இடங்களில் ஒரே ஒரு படிவத்தை மட்டும் வாக்காளர்களுக்குக் கொடுப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வாக்காளர் எழுப்பும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எந்த விதமான விளக்கமும் சொல்லத் தெரியாத, தேர்தல் சம்பந்தமான விவரங்கள் தெரியாத ஒப்பந்த கடைநிலை ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்துகின்றனர்.
அதேபோல் அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் முறையாக எடுப்பதில்லை. இளம் வாக்காளர்கள் படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டியதில்லை என, தவறான வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகிறது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரி செய்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.