கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும்.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வில் தனக்கு சீட் வழங்கப்படாததால், ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை தரப்பில் வெளியான தகவலின்படி, திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் கே. தம்பி நேற்று மாலை (நவம்பர் 15) தனது வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார்.
திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் ஏமாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், பா.ஜ.க. உள்ளூர் தலைவர்கள் தரப்பில், ஆனந்த் கே. தம்பி சீட் கேட்டு தங்களை ஒருபோதும் அணுகவில்லை என்றும், அவரது மரணத்தையும் சீட் மறுக்கப்பட்டதையும் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆனந்த் கே. தம்பி பா.ஜ.க.வில் தனக்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்களைக் குற்றம்சாட்டி சனிக்கிழமை மதியம் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார்.
அதில், மணல் கடத்தல் மாஃபியாவுடன் தொடர்புடைய சில உள்ளூர் தலைவர்களின் நலன்களுக்காக தனக்கு சீட் மறுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்ததால், அவரின் நண்பர்கள் அவரை விலகியிருக்கத் தொடங்கினர். இதனால் வருத்தமடைந்த ஆனந்த் கே. தம்பி, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்து அவரது வீட்டுக்கு விரைந்த நண்பர்கள், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில், பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் “அவரின் தற்கொலைக்கும், சீட் மறுக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறி வருவதால், போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.