கோவை: பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு நவம்பர் 19,20-ம் தேதிகளில் நடக்கிறது. நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவை விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோவை விமான நிலையத்தில் தற்காலிகமாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி விமான நிலைய வளாக நுழைவாயில் முன் நவம்பர் 18-ம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 19-ம் தேதி மாலை 6 மணி வரை வாகனங்களை நிறுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.
நுழைவாயில் பகுதியில் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மூன்று நிமிடங்கள் வழங்கப்படும் கால அவகாசம் வழக்கம் போல் நடைமுறையில் இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும், நவம்பர் 18, 19-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள் மேற்குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலைய இயக்குநர்(பொறுப்பு) சம்பத் குமார் கூறும் போது, பிரதமர் வருகை மற்றும் உளவுத்துறை அறிவுறுத்தலின்பேரில் கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் சோதனை தவிர அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஒரு சிலருக்கு இரண்டு அல்லது மூன்று முறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயணிகள் மட்டுமின்றி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், விமான நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் விமான நிலையத்திற்குள் மட்டுமின்றி வெளியே அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அதிதீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.என்றார்.