பிஹாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது? – காந்தி மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை வென்றது. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19 இடங்களையும், எச்ஏஎம் 5 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் வென்றன. எதிக்கட்சிகளின் மகா கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்றது. ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பிஎஸ்பி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பிஹாரில் புதிய அரசு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பதவியேற்பு விழாவுக்காக பாட்னாவின் காந்தி மைதானத்தில் ஏற்பாடுகள் முழு வீச்சில் உள்ளன, இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18வது பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகு புதிய சட்டப்பேரவையை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

17-வது சட்டப்பேரவையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நிதிஷ் குமார் நாளை அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதன் பின்னர் அவர் ராஜ் பவனுக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவி விலகியவுடன், கூட்டணியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் சட்டப்பேரவை கட்சிக் கூட்டங்களை நடத்தும். அதன் பின்னர், தேசிய ஜன்நாயக கூட்டணியின் தலைவர்கள் ஆலோசித்து புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையை தேர்ந்தெடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.