திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கையால் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது; புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் முக்கிய ஏரியான பூண்டி ஏரியிலிருந்தும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 15-ம் தேதி மதியம் முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 700 கன அடி என, வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, நீர் வரத்தை பொறுத்து அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி மாலை விநாடிக்கு 10,250 கன அடி என, பூண்டி ஏரிக்கு நீர் வரத்து இருந்ததால், அன்று மாலை 6 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அதன் பிறகு, நீர் வரத்தை பொறுத்து, பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டும், அதிகரிக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 790 கன அடியாகவும், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாகவும் இருந்தது.
இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,398 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 32.57 அடியாகவும் இருந்தது. இச்சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று காலை 8 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தனர் நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள்.
புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு1, 500 கன அடியாக அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 15-ம் தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன அடி வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது.
அதுமட்டுமல்லாமல், நீர் வரத்தை பொறுத்து, அவ்வப்போது உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்படுவதும், பிறகு தொடர்வதுமாக இருந்து வந்தது.இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,803 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம் 18.95 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 285 கன அடியாகவும்,உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 600 கன அடியாகவும் இருந்தது.
இச்சூழலில் கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று காலை 8 மணியளவில் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரின் அளவை விநாடிக்கு 1, 200 கன அடியாக அதிகரித்தனர் நீர் வள ஆதாரத் துறையினர். பிறகு அந்தளவு, மதியம் 2 மணியளவில் விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
ஆகவே, பூண்டி மற்றும் புழல் ஏரிகளின் உபரி நீர் செல்லும் கொசஸ்தலை ஆறு, புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது.