ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மெதினாவில் இந்தியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரகமானது, ஜெட்டா தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன? சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, இன்று (திங்கள்) மதீனா அருகே உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கருடன் மோதியதில் 42 பேர் கருகி உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபற்றி பேசிய ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி, “மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற 42 ஹஜ் யாத்ரீகர்கள் தீப்பிடித்து எரிந்த பேருந்தில் இருந்தனர். ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத் தலைவர் அபு மதன் ஜார்ஜிடம் பேசினேன். இந்த விஷயம் குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருவதாக அவர் எனக்கு உறுதியளித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு பயண நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, பயணிகளின் விவரங்களை சேகரித்து, ரியாத் தூதரகம் மற்றும் வெளியுறவுச் செயலாளருடன் பகிர்ந்து கொண்டேன்
மத்திய அரசு, குறிப்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உயிரிழந்தோரின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரவும், யாராவது காயமடைந்தால், அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “டிஜிபி மற்றும் அதிகாரிகள் விபத்தில் நமது மாநிலத்தைச் சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களைச் சேகரித்து உடனடியாக வழங்க வேண்டும். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். புதுடெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். தூதரக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிவதற்கு, 8002440003 (கட்டணமில்லா தொலைபேசி எண்), 0122614093, 0126614276, +966556122301 (வாட்ஸ் அப்) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.