சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு செயல் அலுவலர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆயிரத்து 809 கோயில்களை 668 செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அளித்த பதிலில், 3250 செயல் அலுவலர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் நியமன உத்தரவுகளை இணையதளங்களின் பதிவேற்றம் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2022-ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மனுதாரர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.