New voter ID : வாக்காளர் அடையாள அட்டை (EPIC) பெறுவதற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தி. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. உங்கள் கைகளில் இருக்கும் மொபைல் வழியாகவே புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இனி புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கும், அல்லது விவரங்களைப் புதுப்பிக்கும் நபர்களுக்கும், அவர்களது வாக்காளர் அட்டை (EPIC) வெறும் 15 நாட்களுக்குள் கையில் கிடைத்துவிடும்.
Add Zee News as a Preferred Source
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை
புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அல்லது சட்டமன்றத் தொகுதிக்குள் வேறு முகவரிக்கு இடம் மாறியவர்கள், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in/ க்குச் சென்று விண்ணப்பிக்கலாம். முதலில், நீங்கள் உங்கள் மொபைல் எண் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, ‘புதிய வாக்காளராகப் பதிவு செய் / சட்டமன்றத் தொகுதிக்குள் இடமாற்றம் செய்’ என்ற பிரிவின் கீழ் உள்ள ‘படிவம் 6’ (Form 6)-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தப் படிவத்தில், உங்கள் மாநிலம் மற்றும் சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்களின் தனிப்பட்ட விவரங்கள், குடும்ப உறுப்பினரின் EPIC எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அடுத்து, உங்களின் தற்போதைய முழு முகவரி விவரங்களையும், அதற்கான சரியான முகவரிச் சான்றையும் (ஆதார் அட்டை, மின்கட்டண ரசீது அல்லது வங்கி பாஸ்புக் நகல்) பதிவேற்ற வேண்டும்.
மேலும், உங்களின் வயதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் போன்ற ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும். இறுதியாக, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை அப்லோட் செய்து, உறுதிமொழிப் படிவத்தை (Declaration) பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதும், நீங்கள் அதைக் கண்காணிக்க உதவும் ஒரு ஒப்புகை எண் (Reference ID) வழங்கப்படும்.
செயலி மூலம் விண்ணப்பிக்கும் முறை
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ‘Voter Helpline App’ என்ற செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் (Android அல்லது iOS) பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். முதலில், செயலியைத் திறந்து, உங்கள் மொபைல் எண் மற்றும் OTP மூலம் உள்நுழைய வேண்டும். முதன்மைத் திரையில் உள்ள ‘வாக்காளர் பதிவு’ அல்லது ‘புதிய வாக்காளர் பதிவு (படிவம் 6)’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இணையதளத்தில் விண்ணப்பித்ததைப் போலவே, இந்தப் படிவம் 6-ல் கேட்கப்படும் அனைத்துத் தகவல்களையும் (தனிப்பட்ட விவரங்கள், முகவரி, ஆவணங்கள், புகைப்படம்) கவனமாக உள்ளிட வேண்டும். இந்தச் செயலி மூலம், ஆவணங்களை உங்கள் மொபைலின் கேலரியில் இருந்தே எளிதாகப் பதிவேற்ற முடியும். அனைத்துப் படிகளும் முடிந்த பிறகு, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், செயலியில் உங்களுக்கு ஒரு ஒப்புகை எண் (Reference ID) காண்பிக்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி, செயலியில் உள்ள ‘Status of Application’ பிரிவின் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம்.
விண்ணப்பத்திற்குத் தேவைப்படும் முக்கியமான ஆவணங்கள்
புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது (படிவம் 6), கீழ்க்கண்ட ஆவணங்களின் டிஜிட்டல் நகல்களைப் பதிவேற்ற வேண்டியது அவசியம். இந்த ஆவணங்கள் அனைத்தும் தெளிவாகவும், படிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். முதலாவதாக, உங்களின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் தேவை. அடுத்ததாக, நீங்கள் 18 வயது பூர்த்தி செய்தவர் என்பதை நிரூபிக்க, பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், அல்லது இந்தியப் பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் ஒரு வயதுச் சான்று தேவைப்படுகிறது.
மூன்றாவதாக, நீங்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் சாதாரணமாக வசிப்பவர் என்பதை நிரூபிக்க, வசிப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, அல்லது சமீபத்திய மின்சாரம்/தண்ணீர்/கேஸ் ரசீதுகள் போன்ற ஏதேனும் ஒரு முகவரிச் சான்று தேவை. இந்த ஆவணங்கள் அனைத்தும் விண்ணப்பத்தின்போது தவறாமல் பதிவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகள்
நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் உண்மைத்தன்மை மற்றும் நீங்கள் அளித்த விவரங்களின் துல்லியத்தைச் சரிபார்க்க, வாக்குச் சாவடி நிலை அலுவலர் (BLO – Booth Level Officer) உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை நடத்தலாம். அவர் சரிபார்த்து, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) அச்சிடப்பட்டு, அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் இந்தியத் தபால் துறை மூலம் உங்கள் வீடு தேடி வந்து சேரும்.
About the Author

Karthikeyan Sekar
I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.
…Read More