ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு தயாராகும் வகையில், தங்களது அணியில் இருந்து 12 வீரர்களை விடுவித்து, 16 வீரர்களை தக்கவைத்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், சிஎஸ்கே அணி சுமார் 43.40 கோடி ரூபாய் கையிருப்புடன் களமிறங்குகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு வலு சேர்க்கக்கூடிய முக்கிய வீரர்கள் யார் என்பது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source

ஆல்-ரவுண்டர்களே சிஎஸ்கே-வின் இலக்கு
சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அதன் பேட்டிங் வரிசை மிக நீளமாக இருப்பது தான். இந்த வெற்றிகரமான ஃபார்முலாவை அவர்கள் இந்த முறையும் கைவிட மாட்டார்கள் என்று கைஃப் கருதுகிறார். “சிஎஸ்கே அணி எப்போதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய ஆல்-ரவுண்டர்களையே அதிகம் நம்பியுள்ளது. டுவைன் பிராவோ, ஆல்பி மோர்கல், சாம் கரன் போன்ற வீரர்கள் இதற்குச் சிறந்த உதாரணம்” என்று தனது யூடியூப் சேனலில் கைஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடிப்படையில், இங்கிலாந்தின் அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஆகியோர் சிஎஸ்கே-வுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்பது கைஃபின் முக்கிய கணிப்பாகும். “லிவிங்ஸ்டோன், ஐந்தாம் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதோடு, ஆறாவது பந்துவீச்சாளருக்கான தேவையையும் பூர்த்தி செய்வார். அதே போல, மேக்ஸ்வெல்லின் மதிப்பு சந்தையில் சற்று குறைந்திருக்கலாம், ஆனால் சென்னை போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், அவரது ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சு அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பவர் பிளேயிலும் அவரால் பந்துவீச முடியும்,” என்று கைஃப் விளக்கியுள்ளார்.
மிடில் ஆர்டரை பலப்படுத்த மில்லர்
சிஎஸ்கே அணி, தங்களது இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விடுவித்துள்ளதால், அந்த இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஃபினிஷர் ரோலுக்கு, தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் அல்லது இளம் இந்திய வீரரான அபினவ் மனோகர் போன்றவர்களை சிஎஸ்கே குறிவைக்கலாம் என்றும் கைஃப் கணித்துள்ளார். ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் போன்ற வீரர்கள் கடந்த காலங்களில் சிஎஸ்கே-வில் சிறப்பாக சோபிக்க தவறியதால், இந்த முறை அனுபவமும், அதிரடியும் கலந்த வீரர்களை அணி நிர்வாகம் தேடும் என அவர் குறிப்பிடுகிறார்.
கைஃபின் கணிப்புப்படி, சாம்சன் மற்றும் மாத்ரே தொடக்க வீரர்களாகவும், கெய்க்வாட் (3), பிரெவிஸ் (4), துபே (5) என பேட்டிங் வரிசை அமையலாம். ஆறாவது இடத்தில் ரசல் அல்லது மேக்ஸ்வெல் போன்ற ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்டரையும், அதை தொடர்ந்து தோனியையும் களமிறக்க சிஎஸ்கே முயற்சிக்கும். ஒட்டு மொத்தமாக, ஒரு தரமான ஸ்பின்னர், ஒரு பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் மற்றும் ஒரு சிறந்த தொடக்க வீரர் ஆகியவையே இந்த ஏலத்தில் சிஎஸ்கே-வின் முக்கிய தேவைகளாக இருக்கும் என்று கைப் தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark