ராய்ப்பூர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முற்றி மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பலர் சரண் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டு முக்கிய தலைவர் மத்வி ஹித்மா (வயது 44) என்பவர் கட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரது மனைவி ராஜே உள்ளிட்ட 6 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மத்வி ஹித்மா
1981-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் சுக்மாவில் பிறந்த மத்வி ஹித்மா மக்கள் விடுதலை கொரில்லா என்ற மாவோயிஸ்டு இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு தண்டேவில் நடந்த தாக்குதலில் 76 வீரர்கள் உயிர் இறந்தனர்.
2013-ம்ஆண்டு ஜிராம் காட்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட 27 பேர் இறந்தனர். 2021-ம் ஆண்டு சுக்மா பிஜாப்பூரில் நடந்த தாக்குதலில் 22 பேர் பலியானர்கள். இந்த சம்பவங்கள் உள்பட 26 தாக்குதல்களில் மத்வி ஹிக்மா முக்கிய பங்காற்றினார்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த இவரது தலைக்கு ரூ.50 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் அவர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இறந்து உள்ளார். அப்பகுதியில் மேலும் மாவோயிஸ்டுகள் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.