சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 4 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால், மூன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழக இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், 2 ஆண்டு கரோனா இடை வெளிக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெறும் 10,300 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்து ஏமாற்றியது.
மேலும், 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்தாமல் போட்டித் தேர்வர்கள் வயிற்றில் அடித்தது. இதைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் வெறும் 9,532 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பி வஞ்சித்தது. இந்நிலையில் ஆட்சி முடியும் கடைசி ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகமிகக் குறைந்த அளவாக 3,945 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவித்து திமுக அரசு அதிர்ச்சியளித்தது.
அதன்பின் கூடுதலாக 747 இடங்கள் நிரப்பப்படும் என்று தற்போது அறிவித்துள்ளது. இதனால் அரசுப்பணி கனவு நனவாகும் என்று நம்பிக்கையோடு, இரவு பகலாக படித்து, கடுமையாக உழைத்த அன்பு தம்பி, தங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
எனவே, அரசுப்பணி போட்டித் தேர்வுக்கு முயற்சிக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தபட்சம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.