
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சசி தரூர் எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது:
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நான் பங்கேற்றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா என்பது வளரும் சந்தை மட்டுமல்ல, உலக நாடுகளுக்காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறினார். கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான நிச்சயமற்ற தன்மைக்கு நடுவிலும் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.