இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் தூண்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, இனி இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டுமெனில், உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்த மூத்த வீரர்கள், தொடர்ந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source

இந்திய அணி
இந்திய அணியின் சில முக்கிய வீரர்கள் சர்வதேச போட்டிகள் இல்லாத சமயங்களில், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால், பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அவர்கள் பின்னர் தங்கள் தவறை உணர்ந்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றதால், மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டனர்.
பிசிசிஐ
இந்த சூழலில் தான், பிசிசிஐ மூத்த வீரர்களுக்கும் இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது. “அவர்கள் இருவரும் இரண்டு விதமான கிரிக்கெட் வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், போட்டிக்கு தகுதியாக இருக்க வேண்டுமெனில், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடித் தான் ஆக வேண்டும்” என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு உலக கோப்பையைக் கருத்தில் கொண்டு, வீரர்களின் ஆட்டத் திறனையும், உடற்தகுதியையும் தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
பிசிசிஐயின் இந்த உத்தரவை தொடர்ந்து, கேப்டன் ரோஹித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் உள்ளூர் போட்டிகளில் களமிறங்க உள்ளார். ஆனால், விராட் கோலி இது குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

சர்வதேச போட்டிகள்
கடந்த காலங்களில், தொடர்ச்சியான சர்வதேச போட்டிகள் மற்றும் பயணங்கள் காரணமாக, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க போதிய ஓய்வு கிடைப்பதில்லை என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும் என பிசிசிஐ கருதுகிறது. இந்த புதிய விதி, அணியில் உள்ள இளம் வீரர்கள் முதல் மூத்த வீரர்கள் வரை அனைவரும் சமம் என்பதையும், திறமையும், உடற்தகுதியும் மட்டுமே அணி தேர்வுக்கான ஒரே அளவுகோல் என்பதையும் மீண்டும் ஒருமுறை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
About the Author
RK Spark