ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இச்சாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் தனது மகளுடன் மூத்த சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகள் கடந்த 2022ம் ஆண்டு பருவம் அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து லட்சுமி தனது மகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் வீட்டிற்குள் அடைத்து வைத்தார். பள்ளிக்கும் அனுப்பவில்லை. வெளியேயும் எங்கும் அனுப்பவில்லை. நீண்ட நாட்களாக அச்சிறுமி வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதை அறிந்த கிராம மக்கள் இது குறித்து லட்சுமியிடம் விசாரித்தனர்.
அந்த ஊர்க்காரர்கள் எடுத்துச்சொல்லியும் தனது மகளை வெளியில் அனுப்ப மறுத்தார். இதையடுத்து அக்கிராம மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனே போலீஸாரும், தாசில்தாரும் நேரடியாக அக்கிராமத்திற்கு வந்தனர். லட்சுமியிடம் வீட்டைத் திறக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் லட்சுமி வீட்டைத் திறக்க மறுத்தார். இதையடுத்து அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.
அங்கு அவரது மகள் இருட்டறையில் இருந்தார். அப்பெண்ணை வெளியில் அழைத்து வந்தபோது அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பெண் வெளியுலகத்தைப் பார்த்தார்.
லட்சுமி சற்று மனநிலை சவாலோடு இருந்தார். மூன்று ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டு போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்தார். லட்சுமியையும் போலீஸார் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.