அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போர்ஸ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான திரைப்படம் படம் ‘காந்தா’.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் குமாரி கதாபாத்திரத்தில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இவர் இந்தியில் ‘யாரியான் 2’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமா மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ‘காந்தா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்நிலையில் ‘IANS’ ஊடகத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். “நான் ‘காந்தா’ படத்தில் நடித்த குமாரி கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்தேன்.
ஒரு கட்டத்தில் எல்லோரும் ‘யாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து நாங்கள் பார்க்கவில்லை’ என்று சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரை என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பும் தளமும் கிடைத்தது.
அதனை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான், படம் வெளியான பிறகு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்தது.
கடின உழைப்பு நம்மை நல்ல இடங்களுக்கு தான் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.