கொல்கத்தா,
மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் ரங்கமதி கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக பணியாற்றிய அங்கன்வாடி ஊழியரான 48 வயதான சாந்தி முன் ஓராவ், தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சாந்தியின் கணவர் கூறும்போது, “அவரது வழக்கமான அங்கன்வாடி பணிகள் மற்றும் வீட்டு வேலைகளுக்குப் பிறகு, அவர் இரவில் ஆவணங்களை சேகரிக்கவும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான படிவங்களை நிரப்பவும் வெளியே செல்வார். படிவங்கள் அனைத்தும் வங்காள மொழியில் உள்ளன, ஆனால் இங்குள்ள பெரும்பாலான மக்கள் இந்தி பேசுகிறார்கள். இதனால் அடிக்கடி தவறுகள் நடக்கும். சந்தேகங்கள் எழும்.
ஒவ்வொரு நாள் மாலையும், மக்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். கேள்விகள் கேட்பார்கள். அவளால் மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை,’’ என்றார்.இதுகுறித்து மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, எக்ஸ் வலைத்தள பதிவு வெளியிட்டார். அதில், “நாம் மீண்டும் ஒரு பூத் அதிகாரியை இழந்துள்ளோம். ஒரு அங்கன்வாடி ஊழியர், நடந்து வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியின் பணிச்சுமை தாங்க முடியாத மன அழுத்தத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
முன்னர் 3 ஆண்டுகள் நடந்த இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தற்போது தேர்தல்களுக்கு முன்னதாக அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க 2 மாதங்களுக்குள் கட்டாயப்படுத்தி நடத்தப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீது மனிதாபிமானமற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இடைவிடாத பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையம் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். உடனடியாக இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இருப்பினும், மம்தாவின் குற்றச்சாட்டுகளை பா.ஜனதா நிராகரித்தது. ‘மாநில அரசின் மூத்த அதிகாரிகள்தான் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதனால்தான் இந்த மரணம் நடந்துள்ளது. ஆனால் ஆளும்கட்சியினர் தேர்தல் ஆணையம் மீது பழியை மாற்ற முயற்சித்து வருகிறார்கள்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறினார்.
மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான பிரச்சினைகளால் இதுவரை 28 பேர் இறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.