கன்னியாகுமரி: "ஏரியில் மீன் பிடிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை மேயராக்கினார்" – மா.சு

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.

அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இந்த அரசு மீனவர்களுக்குச் செய்துள்ள நலத்திட்டங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேசினார்கள். மீன்வளத்துறை என்றுதான் முன்பு பெயர் இருந்தது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலன் என இந்த அமைச்சகத்துக்குப் பெயர் வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீன்வளத்துறைக்குத் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மீனவர்களுக்கு சிங்காரவேலர் இலவச வீடு கட்டிக்கொடுத்தார்.

குளச்சலில் உலக மீனவர்தினவிழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குளச்சலில் உலக மீனவர்தினவிழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மீனவர் கூட்டுறவில் வாங்கிய கடன் 96.56 கோடியைத் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி. மறைந்த ஜே.பி.ஆர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சென்னை மேயராகத் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் ஆசைப்பட்டோம். அதை தி.மு.க செய்துள்ளது.

தென்கொரியா சியோன் நகரில் உலக மேயர்கள் மாநாட்டையும், ஜெர்மனியில் மீனவர் மாநாட்டையும் நீங்கள் தொடங்கி வைத்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்’ என்று கூறினார்.

சமுதாயத்தில் மிக மிக பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் நான். ஏரி, குளங்களில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை சென்னை மாநகரத்தின் மேயராகவும், அமைச்சராகவும் அமர்த்தும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், முதல்வர் ஸ்டாலினும் தந்தார்கள்.

இதுவரை மீனவர்கள் மாநாட்டை அரசே நடத்தியது இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாட்டை அரசு சார்பில் நடத்தினார்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தினார் முதல்வர். குமரி மாவட்ட மீனவர்கள் நாட்டுப்படகு இயந்திரம் வாங்க 40 சதவிகிதம் மானியம் அறிவித்தார்.

மீனவ கிராமங்களில் 60 வயதை கடந்த மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்பதுபோன்ற ஏராளமான திட்டங்களை அறிவித்தார்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் 10 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 23 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய அளவிலான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.