KL Rahul Captaincy Record: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. இப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
Add Zee News as a Preferred Source
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா
இந்த சூழலில், தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நேற்று முன்தினம் (நவம்பர் 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் அடித்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. மறுபக்கம் முதல் போட்டியை தோற்ற இந்திய அணி இப்போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்று போராடி வருகிறது.
கேப்டனான கே.எல். ராகுல்
இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 06ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (நவம்பர் 23) அறிவித்தது. சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகி இருப்பதால், இத்தொடரை வழிநடத்த கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அணியில் பல்வேறு மாற்றங்களின் அடிப்படையில் ரிஷப் பண்ட், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்ககப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டியில் கேப்டனாக கே.எல். ராகுல் சாதனை
இந்த நிலையில், இந்திய அணியை வழிநடத்த கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது கேப்டன்சி சாதனைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். கே.எல். ராகுல் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி உள்ளார். அதில் 8 போட்டிகளில் வென்று 4 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளார். அவரது வெற்றி சதவீதம் 66.66ஆக உள்ளது.
டெஸ்ட், டி20 மற்றும் ஐபிஎல்லில் கேப்டனாக கே.எல். ராகுல்
கே.எல் ராகுல் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல் டி20ல் 1 போட்டியில் கேப்டனாக செயல்பட்டு அதில் வென்றுள்ளார். ஐபிஎல்லில் பொருத்தவரை அவரது செயல்பாடு சிறந்ததாக இல்லை. அவர் 64 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 31 போட்டிகளில் வெற்றியும் தோல்வியையும் பெற்றுள்ளார். 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதில் அவரது வெற்றி சதவீதம் 48.43 ஆக உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுல் ரன்கள்
கே.எல். ராகுல் இதுவரை 88 போட்டிகளில் பங்கேற்று 81 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ளார். அதில் அவர் 3092 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 112 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும், 18 அரைசதங்கள் மற்றும் 7 சதங்களை விளாசி தன்னை ஒரு நட்சத்திர வீரராகவே நிலைநிறுத்தி வருகிறார். வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இருப்பதாலும், கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டதாலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டதாலும் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
About the Author
R Balaji