மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த் உடன் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார்.

Rajinikanth என்ன பேசினார்?
இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு ‘கலாசார விருது (Cultural Award)’ வழங்கப்பட்டது.
விருதை வழங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஆழமான அதேசமயம் எளிமையான பாணியில் மேடையில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார். “ஒய்.ஜி. பார்த்தசாரதி, தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தண்ணீர் தொட்டிகள் போன்றவர்கள்; அவர்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், மாணவர்களுக்கு அறிவின் தூய நீரை வழங்க முடியும்” என்று பேசியிருக்கிறார்.

அத்துடன், கல்விச் சமூகத்தை உயர்த்தும் அடிப்படைக் காரணியாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.
இந்த விழாவில் விருதைப் பெற்ற வைஜெயந்திமாலா, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கல்வி, கலை மற்றும் மனிதநேய விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேர இணைத்த இந்த விழா, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் இதயங்களை நெகிழச் செய்த ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவிக்கிறது.