அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார்.
அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, “கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்” என்று பேசியிருந்தார்.
செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் திமுக உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் பாஜக தலைவர் அமித் ஷா சொல்லிதான் விஜய்யின் தவெகவில் இணைந்தார் என்று விமர்சித்திருந்தார்.
தன் மீதான விமர்சனத்திற்குப் பதிலளித்திருக்கும் செங்கோட்டையன், “கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் நான் பேசியதில்லை. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றுதான் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகுதான் அவர்களுடன் நான் பேசினேன்.
எதோவொரு குற்றச்சாட்டை சொல்லி என்னை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே பழனிசாமியின் நோக்கம். அவர் நினைத்தது இன்று நிறைவேறுவிட்டது. நான் எனக்கான அரசியல்பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.

கட்சியில் சேர்ந்து கோபிசெட்டிபாளையம் திரும்பியபோது தவெக தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியது. இளம்தலைமுறையினர் எல்லோரும் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழ்நாடு மக்களும் புதிய மாற்றத்தை, நல்ல அரசியலை விரும்புகிறார்கள் என்பது கூடும் மக்கள் கூட்டம் மூலம் தெரியவருகிறது.
என்னுடைய வேகமான செயல்பட்டை தடை போடவேண்டும் என்று என்மீது வீண் பழிபோடுகிறார்கள்” என்றார்.
மேலும், ‘திமுக உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் பாஜக தலைவர் அமித் ஷா சொல்லிதான் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அதிமுக ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லையா?’ என்று உதயநிதி விமர்சித்தது குறித்து பேசிய செங்கோட்டையன், “நான் யார் சொல்லியும் தவெகவில் இணையவில்லை. இது என்னுடைய முடிவு.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி தூய்மையான ஆட்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வராக இருந்தார், அம்மா ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்தார். அவர்களுக்குப் பிறகு அதிமுக தலைமையும் மாறிவிட்டது. அவர்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டுதான் ஆட்சி மாறியது. அதனால்தான் தூய்மையான ஆட்சி இனி வரவேண்டும், ஆட்சிமாற்றம் வேண்டும் என்று சொன்னேன்” என்று பதிலளித்திருக்கிறார் செங்கோட்டையன்.