டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியிலேயே இருக்கிறது.

இப்போது அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து பிற கட்சியில் இருந்து இன்னும் சில முக்கிய விஜபிக்கள் தவெகவில் இணையப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் டிடிவி தினகரன், “செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் மூத்த தலைவர். பழனிசாமி இடையில் வந்தவர். அதிமுகவின் விசுவாசியாக இருப்பவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் நம்பிக்கையாக நின்றவர்.
செங்கோட்டையன் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு செய்த துரோகத்தால் வந்த விளைவு. அண்ணன் செங்கோட்டையன் அமைதியானவர். ஆனால், ரொம்ப அழுத்தமானவர்.

அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்தவர் இப்போது கட்சி மாறியிருக்கிறார் என்றால் எவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் இந்த முடிவை எடுத்திருப்பார். பழனிசாமியின் துரோகத்திற்கு நிச்சயம் பாடம் புகட்டுவார் செங்கோட்டையன்.
தவெகவிற்குச் சென்றபிறகும் அம்மாவின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்தது அண்ணன் செங்கோட்டையனின் உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறது. அது அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறது. எங்களுக்கு எல்லாம் அது பெருமையாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.