இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் மெஷினாக வலம் வரும் வங்காள கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT 2025) காட்டிய அதிரடி ஆட்டம் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற பிம்பத்தை உடைத்து, டி20 வடிவிலும் தான் ஒரு ராஜா என்பதை நிரூபித்துள்ள இவரை, வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்க எந்தெந்த அணிகள் போட்டி போடும்? என்று தெரிந்து கொள்ளுங்கள். முதல் தர கிரிக்கெட்டில் 49 சராசரியுடன் 27 சதங்களை விளாசியுள்ள ஈஸ்வரன், சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் வெறும் 66 பந்துகளில் 130 ரன்கள் குவித்து அனைவரையும் மிரள வைத்தார். இதில் 8 சிக்ஸர்கள் அடக்கம். 34 டி20 போட்டிகளில் 37-க்கும் அதிகமான சராசரி மற்றும் 129 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் இவர், இன்னிங்ஸை நிலைநிறுத்தி ஆடவும், தேவைப்படும்போது அதிரடி காட்டவும் வல்லவர்.
Add Zee News as a Preferred Source

அபிமன்யுவை குறிவைக்கும் 5 அணிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
கையில் ரூ.64.30 கோடி இருப்பு வைத்துள்ள கேகேஆர், வெங்கடேஷ் ஐயரை விடுவித்த பிறகு ஒரு வலுவான இந்திய பேட்டரை தேடுகிறது. குர்பாஸ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்குப் பிறகு, 3-வது இடத்தில் களமிறங்க ஒரு நம்பிக்கையான வீரர் தேவை. வங்காளத்தை சேர்ந்த ஈஸ்வரன் கேகேஆர் அணிக்கு ‘லோக்கல் ஹீரோ’வாகவும், மிடில் ஆர்டரில் நிலைத்தன்மையையும் கொடுக்கக்கூடியவர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC)
பாப் டு பிளெசிஸ் மற்றும் மெக்கர்க் போன்ற வெளிநாட்டு வீரர்களை விடுவித்துள்ள டெல்லி அணிக்கு, டாப் ஆர்டரில் ஒரு அனுபவமிக்க இந்திய பேட்டர் தேவை. வெளிநாட்டு வீரர்களை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்க்க, ஈஸ்வரன் போன்ற ஒரு வீரர் அணிக்கு தேவை. தொடக்க வீரராகவோ அல்லது 3-வது இடத்திலோ இவர் கச்சிதமாக பொருந்துவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி உள்ளது. ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இருந்தாலும், 3 அல்லது 4-வது இடத்திற்கு ஒரு வலுவான இந்திய வீரர் இல்லை. சேப்பாக்கம் போன்ற மெதுவான ஆடுகளங்களில், ஈஸ்வரன் போன்ற நிதானமான ஆட்டக்காரர்கள் மிகவும் அவசியம். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்குச் சிஎஸ்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்பதால், ஈஸ்வரன் அவர்களின் பட்டியலில் இருக்க வாய்ப்புள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் (GT)
கில் மற்றும் சாய் சுதர்சனை மட்டுமே நம்பியுள்ள குஜராத் அணிக்கு, ஒரு மாற்று தொடக்க வீரர் அவசியம். காயம் அல்லது மோசமான ஃபார்ம் காரணமாக யாரேனும் விலகினால், அந்த இடத்தை ஈஸ்வரனால் நிரப்ப முடியும். பெரிய போட்டிகளில் பதற்றம் இல்லாமல் ஆடும் இவரது திறன் அணிக்கு பலம் சேர்க்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
மயங்க் அகர்வால் போன்ற வீரர்களை விடுவித்துள்ள ஆர்சிபி, டாப் ஆர்டரில் ஒரு இந்திய வீரரை தேடுகிறது. சின்னசாமி ஸ்டேடியம் போன்ற சிறிய மைதானங்களில், ஈஸ்வரனின் டெக்னிக்கல் பேட்டிங் மற்றும் சமீபத்திய அதிரடி ஃபார்ம் அணிக்கு கைகொடுக்கும். அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது விக்கெட்டை பாதுகாத்து ரன் சேர்க்க இவர் பொருத்தமானவர். மொத்தத்தில், ரெட் பால் கிரிக்கெட்டில் கலக்கிய ஈஸ்வரன், இப்போது ஒயிட் பால் கிரிக்கெட்டிலும் தனது முத்திரையை பதிக்கத் தயாராகிவிட்டார். மினி ஏலத்தில் இவர் மீது பணமழை பொழியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark