Sanchar Saathi app : மத்திய அரசின், தொலைத்தொடர்புத் துறையால் (DoT) அறிமுகப்படுத்தப்பட்ட சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி குறித்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் சர்சையாக மாறியுள்ளது. நாட்டில் புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்தச் செயலியை முன்பே இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டது. இதுதான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஆனால், இந்தச் செயலி கட்டாயம் இல்லை என்றும், பொதுமக்கள் விரும்பினால் அதனை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கிக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.
Add Zee News as a Preferred Source
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா சொன்னது என்ன?
மத்திய அமைச்சர் சிந்தியா பேசும்போது “சஞ்சார் சாத்தியை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதனை நீக்கிவிடலாம். இது ஒரு விருப்பத் தேர்வுக்குட்பட்டது (Optional). இந்தக் கருவியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்களது கடமை. ஆனால், அதனைத் தங்கள் சாதனங்களில் வைத்துக்கொள்வதா வேண்டாமா என்பது பயனரின் கையில் உள்ளது” என்று கூறினார். மேலும், “எதிர்க்கட்சிகளுக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லாததால், இதைப் பிடித்துக்கொண்டுள்ளனர். ஆனால், நுகர்வோருக்கு உதவுவதும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்கள் கடமையாகும். இந்தச் செயலி ஒட்டுக்கேட்பதையோ (Snooping) அல்லது அழைப்புகளைக் கண்காணிப்பதையோ (Call Monitoring) ஒருபோதும் செய்யாது. நீங்கள் விரும்பினால் அதனைச் செயல்படுத்தலாம் அல்லது செயலிழக்கச் செய்யலாம்” என்றும் அவர் உறுதியளித்தார்.
சஞ்சார் சாத்தி செயலி நன்மைகள்
சஞ்சார் சாத்தி செயலியின் பயன்களைப் பற்றிக் குறிப்பிட்ட சிந்தியா, இந்தக் கருவி மூலம் இதுவரை 1.75 கோடிக்கும் அதிகமான மோசடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 20 லட்சம் திருடப்பட்ட தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டு, 7.5 லட்சம் தொலைபேசிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.
தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவு:
மத்திய அமைச்சரின் விளக்கத்திற்கு மாறாக, தொலைத்தொடர்புத் துறை (DoT) நவம்பர் 28 அன்று வெளியிட்ட உத்தரவு, அனைத்து புதிய மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன் நிறுவ வேண்டும் என்றும், மேலும், பயனர்கள் இந்தச் செயலியை நீக்க முடியாத (Non-removable) வகையில் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியது. இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தவும், 120 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது இணையப் பாதுகாப்பையும், ஸ்பேம் தடுப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏன் இத்தனை எதிர்ப்பு?
சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தனியுரிமை அச்சுறுத்தல்: எதிர்க்கட்சித் தலைவர்களான ஆதித்ய தாக்கரே இதை “டிஜிட்டல் சர்வாதிகாரம்” என்று விமர்சித்தார். பிரியங்கா சதுர்வேதி இதை “பிக் பாஸ் கண்காணிப்பு” முயற்சி என்று சாடினார். இந்தச் செயலிக்கு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி பதிவுகள், அழைப்புகளை மேற்கொள்ளும் மற்றும் நிர்வகிக்கும் திறன், செய்திகள் அனுப்புதல், புகைப்படங்கள் மற்றும் கேமராவை அணுகுதல் போன்ற விரிவான அனுமதிகள் தேவைப்படுவதால், இது பயனரின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
சஞ்சார் சாத்தி செயலியின் முக்கியப் பலன்கள்:
மத்திய அரசு இந்தப் பாதுகாப்புக் கருவியை அறிமுகப்படுத்தியதன் நோக்கம், தொலைந்த அல்லது திருடப்பட்ட சாதனத்தைக் கண்காணிப்பதுடன், அதன் ஐஎம்இஐ (IMEI) எண் மூலம் அதைப் பயன்படுத்துவதைத் தடுக்க உதவுகிறது. காவல்துறை, அரசு அதிகாரி, வங்கி அல்லது மின்சாரத் துறை அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளைப் புகாரளிக்க உதவுகிறது. உங்கள் அடையாள அட்டையில் எத்தனை மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்கவும், தேவையற்ற இணைப்புகளைப் புகாரளிக்கவும் இது உதவுகிறது.
உங்கள் மொபைல் போனின் 15 இலக்க ஐஎம்இஐ எண் மூலம் அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்கலாம். தற்போது, இந்தச் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கக் கிடைக்கிறது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More