TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ – விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர்.

அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா
காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா

ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

அதையடுத்து நேற்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா நான்காவது முறையாக முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.  

ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டது காவல்துறை. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், “ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறோம். அதேசமயம் நேரம் குறைவாக இருப்பதால் வேறு தேதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

அதைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி நடக்கவிருந்த விஜய்யின் ரோடு ஷோ பொதுக்கூட்டமாக மாறி, அதுவும் தள்ளிப்போகும் சூழல் நிலவியது.

இந்த நிலையில்தான் இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் ரங்கசாமியின் அறைக்கு டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஜி அஜிஸ்குமார் சிங்ளா, டி.ஜ.ஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் அங்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஊர்க்காவலர்களாக பயிற்சி பெற்ற 68 பேருக்கு பணி வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமியை அவரது அறையில் சந்தித்தார்.

முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்
முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்

 அதன்பிறகு செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார் புஸ்ஸி ஆனந்த். முதல்வர் அலுவலகத்தில் அதுகுறித்து விசாரித்தபோது, “ரோடு ஷோ நடத்த அவர்கள் கேட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று ஏற்கெனவே காவல்துறை தெரிவித்துவிட்டது.

இன்று புதுச்சேரி ஈ.சி.ஆர் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை ஒன்றரை கிலோமீட்டருக்காவது அனுமதி கொடுங்கள் என்று முதல்வரிடம் கேட்டார் புஸ்ஸி ஆனந்த்.

ஆனால் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டதால் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.