ஐக்கிய அரபு அமீரகத்தின் தன்னந்தனியான பாலைவன பகுதியில் ரஷ்ய கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான ரோமன் நோவாக் மற்றும் அவரது மனைவி அன்னாவின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள் பிளாஸ்டிக் பைகளில், தடயங்களை அழிக்கும் வேதிப்பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில செய்தி அறிக்கைகள், துண்டிக்கப்பட்ட உடலின் சில பாகங்கள் ஒரு வணிக வளாகத்தின் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. ஆனால், இந்தத் தகவலை விசாரணை அதிகாரிகள் பொதுவெளியில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தக் கொலை 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோ முதலீட்டு மோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
டிஜிட்டல் வாலெட்டுகளை அணுகுவதற்காக இவர்கள் ஏமாற்றி வரவழைக்கப்பட்டு, கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காரணம், ரோமன் நோவாக் ஏற்கனவே கிரிப்டோகரன்சி மோசடியில் சிறை சென்றவர். அவரது சமீபத்திய முதலீட்டுத் திட்டங்களும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தன.
யார் இந்த ரோமன் நோவாக்?
ரோமன் நோவாக், கவர்ச்சிகரமான கிரிப்டோகரன்சி திட்டங்கள் மூலம் ரஷ்யா, சீனா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள முதலீட்டாளர்களை ஏமாற்றி, 60 முதல் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மோசடியில் ஈடுபட்டதற்காக 2020ஆம் ஆண்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி.
2023ஆம் ஆண்டு பரோலில் விடுதலை பெற்ற இவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்துள்ளார். தாம் சந்திக்கும் முதலீட்டாளர்களிடம் டெலிக்ராம் நிறுவனரின் நெருங்கிய நண்பர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மத்திய கிழக்கில் பெரிய பங்களா, பல சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர் இவர். டிஜிட்டல் முதலீடு தொடர்பாக தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு, ‘ஃபிண்டோபியோ’ (Fintopio) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இது ரஷ்யா, சீனா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள முதலீட்டாளர்களிடம் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டது.
ஃபிண்டோபியோ ஒரு கிரிப்டோ வாலெட் மற்றும் பரிமாற்ற தளமாக தொடங்கப்பட்டது. இதில் TON/Telegram உள்கட்டமைப்பில் DeFi, CeFi சேவைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடும் ஈர்க்கப்பட்டிருந்தது.
ஆனால் பின்னர் இது ஒரு பான்சி திட்டம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, புதிய முதலீட்டாளர்களின் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு லாபமாக வழங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர்.
இறுதியாக ‘செயல்பாட்டு மறுஆய்வு’ (Operational Review) காரணமாக வாலெட் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற இந்தக் கொலைகள், இந்த மோசடி மூலம் கிடைத்த பணம் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நடந்தது என்ன?
முதற்கட்ட தகவல்களின் படி, அக்டோபர் 2ஆம் தேதி, UAE–ஓமன் எல்லையை ஒட்டிய ஹட்டா (Hatta) பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில், அவர்களது தனிப்பட்ட ஓட்டுநரால் இறக்கிவிடப்பட்ட கணவன்–மனைவி இருவரும் காணாமல் போயுள்ளனர்.
கிரிப்டோ வணிகத்துக்கான புதிய முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தனர். இது ஒரு திட்டமிட்ட அழைப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அங்கே இறங்கி, வேறு ஒரு காருக்கு மாறி மாயமாகியிருக்கின்றனர்.
நோவாக் மற்றும் அன்னாவைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், ரஷ்யாவில் உள்ள அவரது குடும்பத்தினர் ரஷ்ய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அமீரக சட்ட அமலாக்கத்துறையினர் ஒருங்கிணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அக்டோபர் 4ஆம் தேதி, ஹட்டா மற்றும் ஓமன் இடையே அவர்களது கடைசி செல்போன் சிக்னல் பதிவாகியிருப்பதையும், பின்னர் அது தானாக துண்டிக்கப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

காவல்துறையினர், இந்த தம்பதி போலியான காரணம் சொல்லி ஒரு வாடகை வில்லாவுக்கு அழைத்துவரப்பட்டு, அங்கே கிரிப்டோ வாலட்டுக்கான கடவுச்சொல்லைக் கூற மிரட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தை அடைய முடியாத கடத்தல்காரர்கள் கொலை செய்து, உடலை துண்டுகளாக்கி, தடயத்தை அழிக்கும் ரசாயனங்களுடன் தடிமனான பிளாஸ்டிக் பைகளில் போட்டு பாலைவனத்தில் புதைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளே ஈடுபட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைக்காக ரஷ்ய மற்றும் ஓமன் அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். உடல்களை ரஷ்யாவுக்கு எடுத்துவரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.