பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்குகிறது. இத்தகைய போட்டிக்கு என்று பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்தில் இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிரமாக பயிற்சி எடுத்து தங்களை தயார்படுத்தியுள்ளனர்.
முதலாவது டெஸ்டில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் களம் காணும் ஆஸ்திரேலிய அணியினர் பிங்க் பந்து போட்டி என்றாலே குஷியாகி விடுவார்கள். ஏனெனில் பிங்க் பந்து டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி ஆஸ்திரேலியா தான். இதுவரை 14 பிங்க் பந்து டெஸ்டில் விளையாடி 13-ல் வெற்றி பெற்றுள்ளது.
பெர்த்தில் 10 விக்கெட் வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பிங்க் பந்து போட்டியில் இதை விட அபாயகரமான பவுலராக இருப்பார். பகல்-இரவு டெஸ்டில் மட்டும் இதுவரை 81 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். முதுகுவலியால் உஸ்மான் கவாஜா விலகியதால் தொடக்க ஆட்டக்காரராக டிராவிஸ் ஹெட் ஆடுவார் என தெரிகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி சரிவில் இருந்து எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடக்க டெஸ்டில் 2-வது நாளுக்குள் அடங்கியதால் கடும் விமர்சனங்களை சந்தித்த இங்கிலாந்து அணி உரிய பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இங்கிலாந்து அணி இதுவரை 7 பிங்க் பந்து டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவிடம் 3 முறை உதை வாங்கியதும் அடங்கும்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
ஆஸ்திரேலியா: ஜேக் வெதரால்டு, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன். ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலன்ட், பிரன்டன் டாக்கெட்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி சுமித், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர்.
இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.