தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த விதி என்ற 6 வயது சிறுமி காணவில்லை. அச்சிறுமி தனது பெற்றோர் மற்றும் பாட்டி–தாத்தாவுடன் திருமணத்திற்கு வந்திருந்தாள்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணவில்லை என்பதை அறிந்தவுடன், திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் சேர்ந்து சிறுமியை தேடத் தொடங்கினர். எல்லா இடங்களிலும் தேடினர்; ஆனால் எங்கிலும் தென்படவில்லை. திருமண வீட்டில் ஒரு ஸ்டோர் ரூம் பூட்டப்பட்டிருந்தது.
அந்த அறையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் தலை மூழ்கிய நிலையில் சிறுமி இருந்தாள். உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமண வீடு துக்கவீடாக மாறியது. போலீஸார் விரைந்து வந்து திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் விசாரணையைத் தொடங்கினர். போலீஸாரின் தீவிர விசாரணையில், இந்தக் கொலையை திருமணத்திற்கு வந்திருந்த பூஜா என்ற பெண்ணே செய்தது தெரியவந்தது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சிறுமி மாடிக்கு செல்வதை பூஜா கவனித்திருந்தார். உடனே பின்னால் பூஜாவும் சென்றார். மாடிக்கு சென்று பூஜா அச்சிறுமியிடம் பேச்சுக்கொடுத்தார். பேசி அச்சிறுமியின் நம்பிக்கையைப் பெற்று, அவளை அங்கிருந்த ஸ்டோர் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டி இருந்தது. சிறுமியிடம் இந்தத் தண்ணீருக்குள் இறங்கும்படி கேட்டுக்கொண்டார். பூஜா சொன்னபடி சிறுமியும் தண்ணீருக்குள் இறங்கினாள்.
உடனே அச்சிறுமியின் தலையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொண்டு பூஜா கொலை செய்துள்ளார். சிறுமி இறந்தபின் எதுவும் தெரியாதது போல் ஸ்டோர் ரூம் கதவை பூட்டிவிட்டு பூஜா சென்றுவிட்டார். போலீஸார் பூஜாவை கைது செய்து விசாரித்தபோது அவர் கூறிய பதில் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்தது. கொலை செய்யப்பட்ட சிறுமி, பூஜாவின் சகோதரரின் மகள் ஆவார்.
சிறுமி தன்னைவிட அழகாக இருந்ததாகவும், எனவே கொலை செய்ததாகவும், “என்னை விட குடும்பத்தில் யாரும் அழகாக இருக்கக்கூடாது” என்ற பொறாமையால் இக்கொலையை செய்ததாக பூஜா தெரிவித்துள்ளார்.
பூஜா இந்தக் கொலை மட்டுமல்லாது இதற்கு முன்பும் இதே முறையில் சொந்த மகனையும் கொலை செய்துள்ளார்.
அதோடு மேலும் இரு சிறுமிகளையும் இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அனைத்திற்கும் காரணம், அவர்கள் பூஜாவை விட அழகாக இருந்தார்கள் என்பதே.

போலீஸார் கூறுகையில், “பூஜா அழகான சிறுமிகளை மட்டும் குறிவைத்து இக்காரியத்தை செய்து வந்துள்ளார். விசாரணையில், சொந்த மகன் உட்பட நால்வரைக் கூட இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு நடந்த மூன்று மரணங்களும் விபத்து மரணம் என நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் விதி கொலை விசாரணையில், ஏற்கனவே மூன்று பேரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்” என்றனர்.
2023ஆம் ஆண்டு தனது மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவைக் இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்தக் கொலையை செய்தபின், அது கொலை என்று தெரிந்துவிடும் என்ற பயத்தில், தனது 3 வயது மகனையும் அதேபோல் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதமும் இதேபோல தனது சகோதரரின் 6 வயது மகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.