கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் ‘GST 2.0’ நடைமுறை கொண்டுவரப்பட்டது.
அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது.
கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது அமலாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கலால் வரி
இந்த நிலையில், புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் (Cess) வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக தற்போது ‘கலால் வரி (Excise Duty)’ கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கான மத்திய கலால் வரி திருத்த மசோதா நேற்று (நவம்பர் 3) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கலால் வரி என்பது புதிய வரி நடைமுறை இல்லை. ஏற்கெனவே இருந்த ஒன்று தான். ஆனால், 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்த வரி வசூல் நிறுத்தப்பட்டது, செஸ் வரி வசூலிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் கலால் வரியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
நிர்மலா சீதாராமன் பேச்சு
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது புதிய சட்டமோ, கூடுதல் வரியோ அல்ல. மத்திய அரசு எதையும் எடுத்தும் போய்விடவில்லை.
இது செஸ் அல்ல… இது கலால் வரி. இது ஜி.எஸ்.டிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வந்தது.

தற்போது மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதை நிறுத்தியுள்ளதால், மீண்டும் கலால் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்” என்று பேசியுள்ளார்.
இனி 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 – 11,000 வரையிலும், தயாரிக்கப்படாத புகையிலைகளுக்கு 70 சதவிகிதமும், புகையிலைக் கலைவைகளுக்கு 325 சதவிகிதம் வரையிலும் கலால் வரி வசூலிக்கப்படும்.