ஏ.வி.எம் சரவணன் காலமானார்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஏராளமான படகளை தயாரித்துள்ளது.
ஏ.வி மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை எட்டியது.
ஏ.வி.எம் நிறுவனத்தின் படங்கள் என்றால் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியவர் சரவணன். அதேபோல் தமிழ் சினிமாவில் குறைந்து வரும் குடும்ப படங்களுக்கும், அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்.
2014-ம் ஆண்டுக்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமாகி விட்டார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3-வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.