தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்குப் பிறகு பொறுப்பெடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன்.
ஏராளமான வெற்றிப் படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் 86 வயதான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிச.4) உயிரிழந்திருக்கிறார்.

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இயக்குநர் வசந்த் ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வசந்த், “சரவணன் சாரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.
1958-ல் ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தின் பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டார். கிட்டதட்ட 65, 66 ஆண்டுகளாக மிகச்சிறந்த பண்பாளராக கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்.
பண்பு என்றால் என்னவென்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். நான் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களை எடுத்ததில்லை.
ஆனால் என்னுடைய படங்களுக்கு நான் தேசிய விருது வாங்கும்போது ஒரே ஒரு கடிதம் எனக்கு வரும்.

அது ஏ.வி.எம் சரவணன் சாரின் கடிதமாகத்தான் இருக்கும். திரைத்துறையில் ஒருவருடன் நேரடி தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராட்டுவார்.
பல முறை என்னுடைய படங்களை டிவியில் பார்த்த பிறகு அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
மறக்கமுடியாத மாமனிதர் அவர். அவரை இழந்துவாடும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.