தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.
அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வந்தார். கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தொடர்ந்து தற்போது தற்காலிகமாக மக்கள் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர். ஆனால் புதுச்சேரி காவல்துறை `ரோடு ஷோ’ நடத்த அனுமதி மறுத்திருக்கிறது.

இந்நிலையில் இன்று அம்பேத்கர் நினைவுநாளில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் ஆணைப்படி இன்று தமிழகம் முழுவதும் அம்பேத்கர் நினைவு நாளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கப் போகிறார்.
ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடாது. இளைஞரின் எழுச்சி நாயகன் விஜய், வெற்றி பெற்று ஆட்சியமைக்கப்போகிறார் என்பதுதான் உண்மை.” என்று பேசியிருக்கிறார்.