ஏவி.எம். சரவணன் குறித்தும் எம்.ஜி.ஆர் உடனான அவரின் நட்பு குறித்தும், ஏவி.எம்.நிறுவனத்தில் இணைந்து தொடர்ந்து அந்நிறுவனத்தில் பயணிக்கும் முக்கிய புள்ளி ஒருவரிடம் பேசினோம்.
“எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படத்துக்கு பூஜை போடப்பட்டது. அந்த சமயத்தில் ஆர்.எம். வீரப்பன் தயாரிப்பில் `நான் ஆணையிட்டால்’ என்கிற கருப்பு வெள்ளை படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டு பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

ஏவி.மெய்யப்ப செட்டியார் `அன்பே வா’ கலர் திரைப்படத்தை படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஆசைப்பட்டார். எம். ஜி.ஆர் என்ன நினைப்பாரோ, ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரோ என்கிற தயக்கம் இருந்தது.
அப்பாவின் சங்கடத்தை அருகில் இருந்து பார்த்த சரவணன் “அப்புச்சி நீங்க கவலைபடாதீங்க. நான் பார்த்துக்கிறேன். ” என்று சொல்லி விட்டு எம்.ஜி.ஆரை பார்க்கும் வேலையில் இறங்கினார். ராமாவரம் தோட்டத்துக்கு செய்தி செல்ல உடனே வரச் சொன்னார்கள். சரவணனை பார்த்தவுடன் “வாங்க முதலாளி” என்று வாஞ்சையுடன் வரவேற்றார், மக்கள் திலகம்.
செட்டியாரின் ஆசையைச் சொல்ல அப்போது அவரை பார்க்க வந்திருந்த ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். “என்னப்பா பொங்கலுக்கு உன் படமா? செட்டியார் படமா? என்று கேட்டார். “அன்பே வா படமே முதல்ல வரட்டும், அப்புறமா நான் ஆணையிட்டால் வரட்டும் ” என்று வீரப்பன் சொல்லி விட்டார். சரவணனை பார்த்த எம்.ஜி. ஆர் “என்ன முதலாளி இப்போ சந்தோஷமா ” என்று பரிவுடன் சொல்ல மகிழ்ச்சி கரை புரண்டது.

நான் ஆணையிட்டால் படத்துக்காக எம்.ஜி.ஆர் கொடுத்த அத்தனை நாட்கள் கால்ஷீட்டையும் மொத்தமாக அன்பே வா படத்துக்கு கொடுத்து விட்டார், எம் ஜி ஆர். ஒரு ஹீரோவாக இல்லாமல் தயாரிப்பு தரப்பில் உண்டான அனைத்து வேலைகளையும் தானே இழுத்து போட்டு வேலை செய்தார். மெய்யப்ப செட்டியார் ஆசைப்பட்ட படியே அன்பே வா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சில்வர் ஜூப்ளி விழா கொண்டாடியது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனபிறகு அவரது ஆட்சிக் காலத்தில சென்னை மாநகர ஷெரிப் பதவியில் இரண்டு ஆண்டுகள் சரவணனை அமர வைத்து அழகு பார்த்தார்.

1979-ஆம் ஆண்டு செட்டியார் மறைவுக்கு பிறகு சரவணன் தலைமையில் அவரது சகோதரர்கள் எம் குமரன், எம்.பாலசுப்ரமணியம் ஆகியோர் செயல்பட்டனர். ரஜினி நடிப்பில் முரட்டுக்காளை, கமலின் சகலகலா வல்லவன், அஜித்தின் திருப்பதி, விக்ரமின் ஜெமினி, சூர்யாவின் அயன் என்று தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் அனைவரது படங்களையும் தயாரித்தார், சரவணன். தமிழ் சினிமாவில் நவீன தொழில்நுட்பம், புதிய டிரெண்ட் போன்றவற்றை உருவாக்கியர். இந்தியாவிலேயே அனிமேஷன் காட்சிகளை முதன் முதலில் ராஜா சின்ன ரோஜா படத்தில் பயன்படுத்தினார். என்று சொல்லிமுடித்தார்.