IND v SA: தெ.ஆ-வை சுருட்டிய குல்தீப், பிரசித்; `சுட்டிப் பையன்' ஜெஸ்வால் 116* ; தொடரை வென்ற இந்தியா!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது.

முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா போட்டி வென்றதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கின.

அதிலும், டெஸ்ட் தொடரை இழந்ததற்கு ஒருநாள் தொடரை வென்று சரிக்கட்ட வேண்டுமென்ற தீவிரத்தோடு இந்தியா களமிறங்கியது.

இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்

அதற்கேற்றாற்போலவே, 20 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா டாஸ் வென்றது. இந்திய கேப்டன் கே.எல். ராகுல் அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் திலக் வர்மாவை சேர்த்து பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்களாக நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி ஆகியோருக்குப் பதில் ரியான் ரிக்கல்டன், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர்.

ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ஆனால், கடந்த இரு போட்டிகளாக 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்து வந்த குயின்டன் டி காக், இப்போட்டியில் அதிரடியாக ஆடத் தொடங்கினார்.

கேப்டன் டெம்பா பவுமா அவருக்கு உறுதுணையாக ஆட டி காக் அரைசதமும் அடித்தார், கூடவே இவ்விருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது.

இந்த நேரத்தில் ஜடேஜா குறுக்கே வந்து பவுமாவின் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அடுத்த சில ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் பிரீட்ஸ்கே, மார்க்ரமை அவுட்டாக்கினார்.

Dewald Brevis - Quinton de Kock
Dewald Brevis – Quinton de Kock

விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் தனது அதிரடியை நிறுத்தாத டி காக், 80 பந்துகளில் சிக்ஸருடன் சதமடித்தார். ஆனால் சதமடித்த சற்று சில ஓவர்களிலேயே அவரையும் அவுட்டாக்கினார் பிரசித் கிருஷ்ணா.

அடுத்து கைகோர்த்த டெவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென் நிதானமாக ஆடத் தொடங்கிய வேகத்தில் அவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் விக்கெட் எடுத்து இன்னிங்ஸை முழுமையாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் குல்தீப் யாதவ்.

இறுதியாக 48-வது ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. பிரசித் கிருஷ்ணாவும், குல்தீப் யாதவும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 271 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரோஹித்தும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கினர்.

மிக மிக நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி பவர்பிளேவில் விக்கெட் எதுவும் விடாமல் 48 ரன்கள் அடித்தது. பின்னர், ரன் அடிப்பதில் கொஞ்சம் வேகம் கூட்டிய ரோஹித் 54 பந்துகளில் அரைசதமடித்தார்.

அடுத்த ஓவரிலேயே இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களையும் கடந்த அதே வேளையில், அடிக்கத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 75 பந்துகளில் அரைசதமடித்தார்.

Yashasvi Jaiswal - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Yashasvi Jaiswal – யஷஸ்வி ஜெய்ஸ்வால்

25 ஓவர்களாக இந்த ஜோடி விக்கெட்டும் விடாமல் 150 ரன்களைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், கேஷவ் மகாராஜ் ரோஹித்தை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார்.

ஒன்டவுனில் விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் பவுண்டரி சிக்ஸருமாக விளாசத் தொடங்கிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் சதமடித்தார்.

தனது முதல் 60 பந்துகளில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்த ஜெய்ஸ்வால் அடுத்த 50 பந்துகளில் 60+ ரன்கள் அடித்து சதமடித்தார்.

அவரைத்தொடர்ந்து கோலியும் வேகமாக ஆடி 40 பந்துகளில் அரைசதமடித்தார். இறுதியில் 39-வது ஓவரில் கோலியின் பேக் டு பேக் பவுண்டரி மூலம் இந்தியா 271 ரன்களைத் தொட்டு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 – 1 எனத் தொடரை வென்றது.

116 ரன்கள் அடித்து நாட் அபிட் பேட்ஸ்மேனாகக் கடைசிவரைக் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது வென்றார். இத்தொடரில் இரண்டு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்கள் குவித்த கோலி தொடர் நாயகன் வென்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.